உபி,யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச செல்போன், ஸ்கூட்டர்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரசை வெற்றி பெற செய்வதற்காக, பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் லக்னோ சென்ற அவர், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். பெண் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சில மாணவிகளை சந்தித்தேன்.

தங்களின் படிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் செல்போன் வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் ஒப்புதலுடன், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இலவசமாக செல்போனும், கல்லூரி இளங்கலை படிப்பை முடித்த மாணவிகளுக்கு எலெக்ட்ரானிக் ஸ்கூட்டரும் வழங்கப்படும்.’ என்று கூறியுள்ளார். இதனுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உள்ள வீடியோவையும் இணைத்துள்ளார்.

Related Stories: