உரிமை உள்ளது என்பதால் சாலைகளை மறிக்கலாமா? விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி:  நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைப் பகுதிகளான நொய்டா குருகிராம், காசியாபாத், சிக்கிரி, சிங்கு உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில் அங்கேயே சாலைகளை மறித்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய அரசுடன் நடத்தப்பட்ட அனைத்துக்கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி நொய்டா பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதற்கு விவசாயிகளுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அதற்காக காலவரையின்றி சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது. அதனை கண்டிப்பாக ஏற்கவும் முடியாது.

இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். மேலும், இவ்வாறு சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையா என்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதால், இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டி உள்ளது,’ என தெரிவித்தனர். விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்தவில்லை. எங்களை வெளியே வரவிடாமல் காவல்துறையினர் தான் பாதைகளை அடைத்துள்ளனர். அதனால்தான் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும் எந்த ஒரு விவகாரத்தையும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் செய்ய மாட்டார்கள். மேலும், ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதே நேரம், பாஜ அங்கு பேரணி நடத்துவதற்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். எதற்காக இத்தகைய ஒருதலைபட்சமான முடிவுகளை காவல்துறை செய்கிறது என்று புரியவில்லை.’ என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் விவசாய அமைப்புகள் அனைத்தும்  தங்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 3 வாரத்திற்குள் ஒன்றிய, மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More
>