கேரளாவில் மேலும் 3 இடங்களில் நிலச்சரிவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் பெரிந்தல்மன்னா பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த வாரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளபெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து இடுக்கி, பம்பை, இடமலையார், செம்மலை உள்பட பெரும்பாலான அணைகள் திறந்து விடப்பட்டன. வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 9,750 ஹெக்டேர் நிலங்கள் அழிந்தன. ரூ.200 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன. 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

மின்வாரியத்துக்கு ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் இறந்தனர். கேரள மாநிலம் முழுவதும் மொத்தம் 39 பேர் இறந்துள்ளனர். கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக, தொழில்நுட்ப கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

உடனே அந்த பகுதியில் வசித்த 50 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் அங்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் நேற்று முன்தினம் மாலை மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியிலும் 2 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று காலையிலேயே அந்த பகுதியில் வசிக்கும் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேசிய மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: