பஞ்சாயத்து அலுவலகத்தில் புகுந்து ஊராட்சி தலைவரை வெட்டிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: பஞ்சாயத்து அலுவலகத்தில் புகுந்து ஊராட்சிமன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 6 பேரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படுகிறது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் யுவராஜ் (38). இவர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டார். அதே அறையில் ஊராட்சி செயலாளர் வினோத் (22) பணி செய்தார். திடீரென அங்கு 2 பைக்குகளில் வந்த 6 பேர், அலுவலகத்தில் புகுந்து ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜை சரமாரியாக வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்ததும் இறந்துவிட்டார் என்று கருதி சென்றுவிட்டனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜின் மனைவி கவிதா பாரதி கொடுத்த புகாரின்படி, கொட்டையூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவம் (50), அஜித் (23) உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘’தனியார் கம்பெனியில் ஸ்கிராப் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவர் யுவராஜை வெட்டியுள்ளனர். இதற்காக 3 மாதத்துக்கு முன்பே யுவராஜை காலி செய்யாமல் விடமாட்டோம்’ என்று எதிர் கோஷ்டியினர் மிரட்டியுள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது.

* உறவினர்கள் சாலை மறியல்

கொட்டையூர் ஊராட்சி தலைவர் யுவராஜை கத்தியால் வெட்டிய சம்பவம் நடைபெற்று ஒரு நாள் ஆகியும், இதுவரையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மப்பேடு காவல் நிலையம் அருகே கூட்டுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சாலை மறியல் போராட்டத்தினால் பூந்தமல்லி தக்கோலம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>