சாலைப்பணியின்போது பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு: தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரியில் சாலைப்பணியின்போது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நகரின் சில பகுதிகளில் இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு தற்காலிகமாக ஜல்லிக்கற்களை கொண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்கமுத்து தெருவில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் சாலைப்பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

அப்போது, ஒரு கருங்கல் தென்பட்டது. அதனை அகற்ற முயன்றபோது அவர்களால் முடியவில்லை. மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அப்படியே விட்டு விட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் தோண்டும் பணி தொடங்கியது அப்போது, சுமார் 4 அடி நீளம் கொண்ட கருங்கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் அர்த்தம் புரியவில்லை. நம் நாட்டை ஆண்ட வெள்ளையர்களின் காலத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் விபரங்கள் அடங்கிய  பெயர்களை அந்த கருங்கல்லில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த இடத்தில் மேலும் சில கல்வெட்டுகள் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக அப்பகுதியில் கூறுகின்றனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வடிவத்தை பார்க்கும்போது சுமார் 150  ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துகளை போல உள்ளது. ஆனால், அதன் விபரம் எதுவும் புரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே தொல்லியல் துறையினர் இங்கு வந்து ஆய்வு செய்து நம்முடைய கடந்த கால வரலாற்றை அறிந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>