சூப்பர்-12க்கு முன்னேற அயர்லாந்து-நமீபியா இடையே கடும் போட்டி: இன்றுடன் முடிகிறது உலக கோப்பை தகுதிச்சுற்று

ஷார்ஜா: உலக கோப்பை டி20 தொடரில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.  பி பிரிவில் களம் கண்ட 4 அணிகளில் இருந்து 2 அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறி விட்டன. அதேபோல் ஏ பிரிவில் இலங்கை மட்டும்  சூப்பர்-12க்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. எனவே பி பிரிவில் எஞ்சிய ஒரு அணி எது என்பது இன்று நடைபெற உள்ள அயர்லாந்து -நமீபியா இடையிலான ஆட்டத்தின் மூலம் தெரிய வரும். ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் இலங்கை முதல் இடத்தில் இருக்கிறது. அயர்லாந்து, நமீபியா அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முறையே 2, 3வது இடங்களில் உள்ளன. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நெதர்லாந்து இன்று கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் வென்றாலும் நெதர்லாந்து வெறும் 2 புள்ளிகளுடன் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அயர்லாந்து-நமீபியா இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி 4 புள்ளிகளுடன் எளிதாக சூப்பர்-12ல் நுழைந்து விடும். அதே நேரத்தில் இலங்கை தோற்றாலும்  பிரச்னையில்லை. கூடவே அதன் ரன் ரேட் +3.165ஆக இருப்பதால் முதலிடமும் இலங்கைக்கு தான். காரணம் மற்ற அணிகளின் ரன் ரேட் மைனசில் உள்ளன. ஒருவேளை அயர்லாந்து-நமீபியா இடையிலான ஆட்டத்தில் அதிக விக்கெட், ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெறும் அதிசயம் நடந்தால், மாற்றம் இருக்கும்.

ஆகையால் இலங்கை-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகதான் இருக்கும். எனவே அயர்லாந்து-நமீபியா இடையிலான ஆட்டத்தில் யார் வெல்லப் போகிறார்களோ அவர்களுக்கு சூப்பர்-12க்கு கட்டாயம் முன்னேறி விடுவார்கள். அதனால் அயர்லாந்தின் அனுபவ ஆட்டக்காரர் கெவின் ஓ பிரைன், பால் ஸ்டிரிலிங், கெரத், 4பந்தில் 4 விக்கெட் எடுத்து சாதனை படைத்த கர்டீஸ் சேம்பர், மார்க் அடய்ர், ஜோஸ்வா  ஆகியோருடன் கேப்டன் ஆண்ட்ரூ ஆகியார் நமீபியாவுக்கு சவாலாக இருப்பார்கள். அதே நேரத்தில் நமீபியாவின் டேவிட் வீஸ், கேப்டன் கெர்ஹார்டு, கிரெய்க், ஸ்டீபர் பார்டு, பிரைலிங்க், ஸ்மித் ஆகியோரும் அயர்லாந்தின் சவாலை சமாளிக்க முயற்சிப்பார்கள். எனவே இன்று நடைபெறும் அயர்லாந்து-நமீபியா ஆட்டத்தில் அனல் பறக்கப்போவது உறுதி. இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதிய 6 டி20 ஆட்டங்களில் அயர்லாந்து 5 ஆட்டங்களிலும், நமீபியா ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன.

Related Stories: