அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு கதி சக்தி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அனுராக் தகவல்

புதுடெல்லி: பிரதமரின் கதி சக்தி தேசிய பெரும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்முனை போக்குவரத்து இணைப்பு வசதிக்கான பிரதமரின் கதிசக்தி தேசிய பெரும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம், சரக்கு கையாளும் திறமையை அதிகரிப்பது, போய் வருவதற்கான நேரத்தை குறைப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ``பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடல் பிரிவின் தலைவர்களை பிரதிநிதியாக கொண்ட பல்முனை ஒருங்கிணைந்த திட்டக் குழு உருவாக்கப்படும்.

இக்குழுவானது, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் கீழ் உள்ள சரக்கு பிரிவு தொழில்நுட்ப உதவி குழுவின் ஆதரவுடன் செயல்படும். தொழில்நுட்ப உதவி குழுவில், விமானப் போக்குவரத்து, கடல்சார், பொது போக்குவரத்து, ரயில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், நகர்ப்புற & போக்குவரத்து திட்டமிடல், எரிவாயுக் குழாய், புள்ளி விவர பகுப்பாய்வு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெறுவர். பிரதமரின் கதிசக்தி தேசிய பெரும் திட்டத்தின் சரக்கு மேலாண்மை செயல்திறனை உறுதிப்படுத்த, இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, மதிப்பீடு செய்வது அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவின் பணியாகும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: