மணப்பெண்ணாக நடித்து விவசாயியிடம் நகை, பணம் கொள்ளை: 2 குழந்தைகளின் தாய் உள்பட 5 பெண்கள் கைது

அவிநாசி: அவிநாசி அருகே மணப்பெண்ணாக நடித்து விவசாயியிடம் நகை, பணம் மோசடி செய்த அரியலூர் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டத்தில் குடியிருப்பவர் மாரப்பன் மகன் ராஜேந்திரன் (34). விவசாயி. திருமணமாகாத இவர் ஈரோடு மாவட்டம் சிறுவலூரை சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்க கூறியுள்ளார். அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் அம்பிகா என்ற பெண் திருமண தரகரிடம் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து அம்பிகா அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

வள்ளியம்மாள் தன் வீட்டில் ரீசா என்ற மணப்பெண் உள்ளதாகவும், அவரது அக்காள் தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகவும் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வரச்சொல்லி உள்ளனர். இதை நம்பி ராஜேந்திரன் கடந்த மாதம் 22ம் தேதி ரீசாவை நிச்சயம் செய்துள்ளனர். உடனடியாக திருமணம் செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தினர். இதனால், 24ம் தேதி பச்சாம்பாளையம் செல்லாண்டியம்மன் கோயிலில் ரீசாவை, ராஜேந்திரன் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்ததும் தரகர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால், ராஜேந்திரன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பிறகு 25ம் தேதி ராஜேந்திரன் வெளியே சென்றிருந்தபோது, ரீசா ஒரு காரை வரவழைத்து, வீட்டிலிருந்த ராஜேந்திரன் போட்டிருந்த தங்க நகைகளுடன் திடீரென மாயமானார். சந்திரன் மூலமாக ராஜேந்திரன் அரியலூரை சேர்ந்த தரகர் வள்ளியம்மாளை தொடர்பு கொண்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அரியலூருக்கு சென்று விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின் பேரில் ராஜேந்திரனை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை திருடி சென்ற ரீசா (27), தரகர்கள் அம்பிகா (38), வள்ளியம்மாள் (45) ரீசாவின் உறவினர் தேவி (55), தங்கம் (36) ஆகியோர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: