×

பழநி, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கு உண்டு, உறைவிடங்கள் தொடங்க திட்ட வரைபடங்கள் தயார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

சென்னை: பழநி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உண்டு, உறைவிடங்கள் தொடங்க திட்ட வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திருப்பணி மேம்பாடு குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பழநி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன முறையில் இயற்கை சூழலில் உறைவிடங்கள் அமைக்கப்பட திட்ட வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அனுமதி பெற்றபின் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்ததோடு, சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி உட்பட 20 மண்டலங்களில் உள்ள திருக்கோயில் திருப்பணிகள் தொடர்பான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகளை தொடர்ந்து ஒவ்வொன்றாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வருகிறது. அன்னை தமிழில் அர்ச்சனை, அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என பல்வேறு திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அனைத்து மண்டலங்களில் உள்ள புதிய திருமண மண்டபங்கள் கட்டுதல், ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர், வெள்ளித் தேர், தங்கத்தேர், புதிய நந்தவனங்கள் உருவாக்குதல், அன்னதானக் கூடங்கள் மேம்படுத்துதல், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள்  தயார் செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மலைக் கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைத்தல்.

மலைப்பாதையை சீரமைத்தல், சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திர சபையில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. வைணவத் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்துதல், திருக்கோயிலுக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு தரமான குங்குமம், விபூதி தயாரித்தல், அர்ச்சகர் ஓதுவார் பயிற்சி பள்ளி ஏற்படுத்துதல்.

 புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டுதல், பள்ளிக் கல்லூரிகளை மேம்படுத்துதல், கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுதல், தமிழர் திருநாள் அன்று அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்குதல், ஆணையர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரூபாய் 15 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுதல், 40 முதுநிலை திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம்  ஆகியவற்றின் செயல்திட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) திரு. கண்ணன் இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (விசாரணை), திருமதி ந.திருமகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Paladhi, ,Paddy and ,Chennai ,Minister ,Sebabu , Palani, Nellai, Chennai have senior citizens, plan maps ready to start lodging: Minister Sekarbabu information.!
× RELATED கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம்