×

கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது: ரூ.99 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்

கோவை: கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.99.25 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸ் கைப்பற்றியது.

இரிடியத்தை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாற்றி விடும் போது இது உண்மையான இரிடியமாக இருந்தால் அவர்கள் அதிக விலைக்கு வாங்குவார்கள். அதை நிரூபிக்க சில ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கும். அதற்கு சிறிதளவு முதலீடு தேவை. அவ்வாறு பணம் கொடுத்தால் முதலீடு செய்து 20 - 30 மடங்காக உங்களுக்கு பணத்தை குறுகிய காலத்தில் தரமுடியும். இது அரசு அங்கீகாரம் கொடுத்துள்ள ஒரு விஷயம் என்று பொய் சொல்லி இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சிறிதளவு பணம் வைத்திருப்பவர்கள் அல்லது சிறிது கஷ்டத்தில் இருப்பவர்கள் கூட கடன் வாங்கியும், நகையை அடகு வைத்தும் பணத்தை தருகின்றனர். அதிகளவு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை கொடுக்கின்றனர். மக்களோடு அலட்சியத்தினாலும், முழு விவரம் தெரியாததாலும் பொதுமக்களை குறி வைத்து இந்த மாதிரியான நபர்கள் செயல்படுகின்றனர்.

பித்தளை செம்பை இரிடியம் கலந்த செம்பு என்று கூறி ரைஸ் புல்லிங் டெக்னிக் மூலமாக ஏமாற்றுகின்றனர். இதற்கு அவர்களின் கும்பலில் ஒரு நபர் அதனை வாங்குபவர் போலவும், ஒரு நபர் அதனை விற்பவர் போலவும், ஒரு நபர் பரிசோதனை செய்யக்கூடியவர் போலவும் அறிவியல் வல்லுநர் போலவும் வேடமிட்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். பித்தளை செம்பின் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளனர். பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளதால் கண் எரிச்சல் ஏற்படும். இது இரிடியத்தால் ஏற்படும் வேவ்ஸ் என்று ஏமாற்றி இது உண்மையான இரிடியம் தான், இதனை மற்றொரு இடத்தில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு பணம் செலவாகும் என்று கூறி பணத்தை சுருட்டுகின்றனர். ஒருகட்டத்தில் அதில் இருந்த பவர் போய்விட்டது, செயலிழந்துவிட்டது என்று நம்ப வைக்கின்றனர்.

இதில் ஏமாறும் பெரும்பாலான மக்கள் அவர்களிடம் திரும்பி கேள்வி கேட்பதில்லை. அவர்கள் மீது புகார் கொடுக்கவோ, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க ஈடுபடாததுமாக உள்ளனர். அலட்சியத்தை பயன்படுத்தி இந்த கும்பல் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகேசன், தினேஷ் குமார், போஜராஜ், சூர்யகுமார் இந்த 4 பேர் சேர்ந்து இந்த குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர். இதில் முருகேசனின் நண்பர் ஷாஜின் கேரளாவில் உள்ளார். இரிடியத்தில் முதலீடு செய்ய விருப்பம் உள்ள நபர்களை ஷாஜின் மூலம் அறிமுகம் செய்துகொள்கின்றனர்.

இந்த குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தும் ஷாஜின் மற்ற நபர்களை அறிமுகம் செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்ப வைப்பதற்காக போலி ரூபாய் நோட்டுக்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் 6 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார். பொதுமக்கள் இரிடியம், ரைஸ் புல்லிங் கும்பலிடம் சிக்காமல் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக பணம் பெறலாம் என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags : Coimbatore , Iridium fraud
× RELATED புதுக்கோட்டையில் பழைய துணிக்கடை...