×

அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் இலங்கை.! எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டும்: கேப்டன் தசுன் ஷனகா பேட்டி

அபுதாபி: ஐசிசி உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் தற்போது தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் ஏ பிரிவில் அயர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹசரங்கா டி சில்வா 71 (47 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), பதும் நிசங்கா 61 ரன் (47 பந்து) அடித்தனர். அயர்லாந்து தரப்பில், ஜோஷ் லிட்டில் 4, மார்க் அடேர் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து 18.3 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 70 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பர்னி 41 (39பந்து), கர்டிஸ் கேம்பர் 24 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் தீக்‌ஷனா 3, சமீகா கருணாரத்னே, லஹிரு குமாரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஹசரங்கா டிசில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் நமீபியாவை வீழ்த்திய இலங்கை நேற்று 2வது வெற்றியை பெற்றது. 4 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி ரன் ரேட்டில் (3.165) நல்ல நிலையில் இருப்பதால் ஏ பிரிவில் சூப்பர் 12 சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. அயர்லாந்து, நமீபியா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. நாளை நமீபியா-அயர்லாந்து, நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன. நெதர்லாந்து 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் நாளை நமீபியா-அயர்லாந்து போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறும். நேற்று வெற்றிக்கு பின் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், 8 ரன்னுக்குள் 2 விக்கெட்இழந்தது கவலையாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஹசரன்கா, நிசங்கா சிறந்த பார்ட்னர் ஷிப் ஏற்படுத்தினர். ஹசரங்காவை டாப்ஆர்டருக்கு அனுப்ப உலக கோப்பை க்கு முன் எங்களுக்கு ஒரு திட்டம் இருந்தது. அது நன்றாக வேலை செய்தது. எங்கள் பீல்டிங்கிலும் மேம்படுத்த வேண்டும், என்றார்.


Tags : Sri ,Lanka ,Super ,Ireland ,Tasun Shanaka , Sri Lanka beats Ireland in Super 12 round We need to improve our fielding: Interview with Captain Thasun Shanaka
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக...