100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி நாடு வலுவான பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜஜ்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின், இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் ஓய்வு இல்லத்தை பிரதமர்  நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், 100 கோடி டோஸ்களை கடந்த இந்நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றார். கடந்த 100 ஆண்டுகளில் அறிந்திராத மிகப்பெரிய பெருந்தொற்று பாதிப்பை எதிர்த்துப் போராடுவதில், 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா வலுவான பாதுகாப்பு கேடயத்தைப் பெற்றுள்ளது என்றும் இந்தச் சாதனைக்கு இந்தியா மற்றும் அதன் குடிமக்கள் அனைவரும் உரித்தானவர்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து நிறுவனங்கள்,  தடுப்பூசியை எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மற்றும் தடுப்பூசியை உருவாக்குவதில் பங்குவகித்த சுகாதாரத்துறை வல்லுனர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துளளார்.தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் ஜஜ்ஜார் வளாகத்திற்கு, புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இன்று தலைசிறந்த வசதி செய்யப்பட்டுள்ளது.தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வு இல்லம், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் கவலைகளை குறைக்கும், என்றார். மேலும் இந்த ஓய்வு இல்லத்தை கட்டிக்கொடுத்ததற்காக இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக்கும், அதற்கான நிலம், மின்சாரம் மற்றும் தண்ணீரை வழங்கிய எய்ம்ஸ் ஜஜ்ஜார் வளாகத்திற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்த சேவைக்காக எய்ம்ஸ் நிர்வாகம் மற்றும் சுதா மூர்த்தி குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

Related Stories: