45 பவுன், பணம், சொகுசு காருடன் மாயமான குமரி தொழிலதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் மீட்பு: டெல்லியில் மடக்கியது தனிப்படை போலீஸ்.!

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 40 நாட்களுக்கு முன்பு 45 பவுன் நகை, பணம், சொகுசு காருடன் மாயமான தொழிலதிபரின் மனைவியை கள்ளக்காதலனுடன் டெல்லியில் வைத்து தனிப்படை போலீஸ் மடக்கி பிடித்தது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் இருந்த சோனியா காந்தி மற்றும் மகளை காணவில்லை. இதேபோல் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில் வைத்திருந்த 45 பவுன் தங்க நகை, ரூ.13 லட்சம் ரொக்க பணம் ஆகியவையும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

சுமார் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகும் குழந்தை, காருடன் மாயமான சோனியா காந்தியை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவரது கணவர் மோகன்ராஜ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 30 நாளில் சோனியா காந்தி, அவரது மகள் ஆகியோரை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாயமான தாய்-மகளை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். இந்த நிலையில் சோனியா காந்தி, மகள் மற்றும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உள்ளூர் போலீசார் உதவியுடன் 3 பேரையும் கண்டுபிடித்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் குமரிமாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு நேற்று 3 பேரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சோனியாகாந்தியின் கணவர், மகன் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து போலீசார் 2 தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சோனியா காந்தி கணவருடன் வாழ தனக்கு விருப்பமில்லை. காதலனுடன் தான் செல்வேன் என்றார். உடனே கணவர் குறுக்கிட்டு மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. எனவே பாதுகாக்க கண்டிப்பாக அம்மா வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும். பிள்ளைகளுக்காக என்னுடன் இருக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். இருப்பினும் சோனியா காந்தி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்திற்கு அனுப்ப முடிவு செய்தனர். இந்த நிலையில் பிள்ளைகளின் பாச போராட்டம், கணவரின் தொடர் வேண்டுகோளால் சோனியா காந்தி மனம் இரங்கினார். இறுதியாக கணவருடன் செல்வதாக கூறினார். இதையடுத்து போலீசார் இருதரப்பிலும் எழுதி வாங்கி கொண்டு, சோனியாவையும், அவரது மகளையும் கணவருடன் அனுப்பி வைத்தனர். பின்னர் கள்ளக்காதலனையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>