தமிழ்நாட்டில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது!: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 53.84 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியிருக்கிறது. அதேபோல கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா உயிரிழப்புகளும் குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. கொரோனாக்கு எதிராக போராட தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் பொதுமக்கள் பலர் வரிசையில் நின்று தடுப்பூசிகளை செலுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் 5.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலரும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்; பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

Related Stories: