சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் கேத்தரின் நீர்வீழ்ச்சி

கோத்தகிரி: கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரியில் குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் அதிக அளவில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தற்போது வனத்துறை மூலம் பாதுகாப்பு வேலிகள், நடைபாதை மற்றும் கழிப்பறை, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்துவதில்லை.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வரும் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை குப்பைத்தொட்டியில் போட குப்பைத் தொட்டிகள் கூட இல்லை. இதனால் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்கு காட்சி கோபுரத்தை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து வனவிலங்குகளின் கூடாரமாகவும், மதுபாட்டில்கள் ஆங்காங்கே வீசப்பட்டு மதுபிரியர்களின் உறைவிடமாகவும் காணப்படுகிறது.மேலும் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆபத்தை அறியாமல் அதிக சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து கழிவுப் பொருட்கள், மதுபாட்டில்கள் இங்குள்ள ஓடைகளிலும்,தேயிலை தோட்டங்களிலும் வீசப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து  நடைபெறாத வகையில்  உரிய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>