ஊட்டியில் சாரல் மழை, குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி: ஊட்டியில் நேற்று மேக மூட்டம் மற்றும் மழை பெய்ததால் குளிர் வாட்டியெடுத்தது. கன மழை காரணமாக சிறிது நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் எந்நேரமும் காற்றுடன் கூடிய சாரல் மழை காணப்படும். இதனால், குளிர் அதிகமாக காணப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். அதேசமயம், ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை சற்று குறைந்து காணப்படும். இவ்விரு மாதங்கள் வெயில் அடிக்கும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் இறுதி வாரத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை விட்டபாடில்லை. குறிப்பாக, ஊட்டியில் எப்போதும் மேக மூட்டம் மற்றும் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்து வருகிறது. இந்த மழை நீலகிரி மாவட்டத்தையும் விட்டபாடில்லை. குறிப்பாக, மாநில எல்லையில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வருகிறது. மேலும், ஊட்டியிலும் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டியில் சில மணி நேரம் கன மழை பெய்தது. குறிப்பாக, படகு இல்லம், காந்தல் உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. தொடர் மழை காரணமாக ஊட்டியில் தற்போது குளிர் அதிகரித்துள்ளது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 12 டிகிரி செல்சியதும் பதிவாகியிருந்தது. மழை மற்றும் குளிரின் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.

Related Stories:

More
>