தென்மாவட்டங்களுக்கு ஒரு வாரம் சசிகலா சுற்றுப்பயணம்!: ஆதரவாளர்கள், அதிமுக மீதான அதிருப்தியாளர்களை சந்திக்க திட்டம்..பீதியில் அதிமுக!!

சென்னை: அதிமுக தலைமையை கைப்பற்ற முயற்சித்து வரும் சசிகலா தென் மாவட்டத்தில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து சசிகலா தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய சசிகலா, ஒற்றுமையாக செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் சசிகலா தென்மாவட்டங்களுக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 26ம் தேதி தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக்கொள்கிறார். அக்டோபர் 28ம் தேதி நெல்லைக்கும், 29ம் தேதி ராமநாதபுரத்திற்கும் சுற்றுப்பயணம் செல்கிறார். அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்கிறார்.

இதற்காக சசிகலா சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நவம்பர் 1ம் தேதி தஞ்சையில் ஆதரவாளர்களை சந்தித்து உரையாடுகிறார். தொடர்ந்து, அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>