பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சாக்பீஸ் தயாரிப்பு பணி மும்முரம்: மானியத்தில் கடன் வழங்க கோரிக்கை

தர்மபுரி: ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் சாக்பீஸ் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாக்பீஸ் தயாரிப்பு குடிசை தொழிலாக நடந்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உப்பளங்களில் கிடைக்கும் ஜிப்சம் பவுடர்தான் சாக்பீஸ் தயாரிப்புக்கு மூலப்பொருள். இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும் போது, நீள்வடிவில் சாக்பீஸ் தயாராகி விடுகிறது. அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க மண்ணெண்ணெய் மற்றும் முந்திரி எண்ணெய் கலவையைத் தடவுகின்றனர். தமிழகத்தில் தர்மபுரியை தவிர சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் சாக்பீஸ் தயாரிப்பு தொழில் நடக்கிறது.

கலர் சாக்பீஸ் தேவையென்றால் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலக்கின்றனர். அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்து, சிறிய அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கின்றனர். வெள்ளை நிற 100 சாக்பீஸ்கள் 15க்கும், கலர் சாக்பீஸ்கள் 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்றால் கடந்த ஒருவருடமாக சாக்பீஸ் தயாரிப்பு தொழில் முடங்கியது. வரும் 1ம் தேதி, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து சாக்பீஸ் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், சாக்பீஸ் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், அடிக்கடி மழை பெய்து வருவதால், சாக்பீஸ்களை வெயிலில் உலர வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது, தமிழகத்தில் சாக்பீஸ் விற்பனை மந்தமாக உள்ளதால், கர்நாடகாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரியில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள முனியப்பன் கூறுகையில், ‘கொரோனா பரவலால் சாக்பீஸ் தயாரிப்பு தொழில் முடங்கியது. வாடகை கட்டிடத்தில் இயங்கிய ஆலைகள் மூடப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சாக்பீஸ் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்க முன்வருவதில்லை. எனவே, கொரோனா காலக்கட்டத்தை கருத்தில் கொண்டு, அரசு வங்கிகள் மானியத்தில் கடனுதவி வழங்க வேண்டும். மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ஸ்டேஷனரி மொத்த வியாபாரிகள் நவீனமாகவும், கவர்ச்சிகரமாக இருக்கும் இறக்குமதி சாக்பீஸ்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்,’ என்றார்.

Related Stories: