அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்த மரங்கள் வெட்டிக்கடத்தல்: லாரி, டிராக்டருடன் பறிமுதல்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து வெட்டி கடத்தப்பட்ட மரங்களை லாரி மற்றும் டிராக்டருடன் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி அடுத்த ஆண்டாக்கோட்டையில சுமார் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட இடம் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தை மீட்டு தருமாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வருவாய்த்துறையினர் ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ள அந்த இடத்தில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை சிலர் உரிய அனுமதி இன்றி வெட்டி லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் கடத்துவதாக அறந்தாங்கி வருவாய்த் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கும்மங்காடு வட்ட கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் சம்பவம் இடத்திற்கு சென்று உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து மரங்களை வெட்டி கடத்திய லாரி மற்றும் டிராக்டரை மரங்களுடன் பறிமுதல் செய்தனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கி வருவாய்த்துறையினர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

Related Stories: