வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிக்கை

செங்கல்பட்டு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ300, (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரையில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ரூ600/-), 12ம் வகுப்பு தேர்ச்சி/ பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ400/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ750/-) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ600/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ1000) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் மேற்காணும் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்). பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்பிசி/ பிசிஎம்/ ஒபிசி/ ஒசி பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி  பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பு இல்லை). விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை).

ஏற்கனவே வேலைவாய்ப்பற்றொருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக்கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு  உதவித்தொகை பெற தகுதியில்லை. மேற்காணும் அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளபடி வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானம், கல்வி மாற்று சான்று.

கல்வி சான்று நகல், சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப நகல் அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் ஏதும் பாதிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: