டெல்லியில் வரும் 25ம் தேதி விழா; ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள்

புதுடெல்லி: இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லியில் நடக்கிறது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமான்,

சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது  கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு வழங்கப்படும். இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மற்றும் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Related Stories: