ஆம்புலன்சில் கணவரை ஏற்றி வந்து அதிமுக மாஜி எம்எல்ஏ மீது தம்பி மனைவி குற்றச்சாட்டு: அருப்புக்கோட்டையில் 42 ஏக்கர் நிலம் மோசடி புகார்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தங்களின் 42 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி பல கோடிக்கு விற்று விட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது, தம்பியின் மனைவி புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக மாவட்டச் செயலாளருமான சிவசாமியின் தம்பி ராஜராஜனின் மனைவி செண்பகவள்ளி நேற்று விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக வந்திருந்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: அருப்புக்கோட்டை தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், தற்போதைய அமமுக மாவட்டச் செயலாளருமான சிவசாமியின் தம்பியும், எனது கணவருமான ராஜராஜன் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளராக இருந்தார். கடந்த 2016ல் பக்கவாத நோயில் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். 23.11.2018ல் சிவசாமி, எங்களிடம் தம்பி ராஜராஜனை சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றார்.

சகோதரிகள் சண்முகவள்ளி, செந்தமிழ் செல்வி ஆகியோரின் துணையோடு போலியான ஆவணங்கள் தயாரித்து எனது கணவர் ராஜராஜனிடம் கையொப்பம் பெற்றுள்ளனர்.பொது சொத்து நிலங்களை விற்காமல் எனது கணவர் ராஜராஜன் சுய சம்பாத்தியத்தில் காரியாபட்டி அருகில் முடுக்கன்குளம் கிராமத்தில் வாங்கிய 42 ஏக்கர் 86 சென்ட் நிலங்களை 2019ல் ரூ.2 கோடிக்கு விற்றுள்ளார். ஒரிஜனல் ஆவணங்கள் எங்களிடம் உள்ள நிலையில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி படுத்த படுக்கையாக இருக்கும் கணவரை எங்களிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று விற்றுள்ளனர்.

சாப்பாட்டிற்கு வழியின்றி, இரு மகன்களுடன் சிரமத்தில் உள்ளேன். போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்களை விற்றது செல்லாது என மாவட்ட பதிவாளரிடம் முறையிட்டதன் பேரில் விசாரணைக்காக படுத்த படுக்கையாக இருக்கும் கணவரை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து வந்தேன். ‘‘எங்கு சென்று முறையிட்டாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ என மிரட்டுகிறார். தமிழக முதல்வர் தலையிட்டு, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவசாமி மீது நடவடிக்கை எடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற நிலங்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: