காட்டுமன்னார்கோவிலில் பதவியேற்பு விழா முடிந்து அலுவலகம் செல்ல காத்திருந்த கூட்டத்தில் பாய்ந்தது கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஊராட்சி தலைவர்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா முடிந்து ஊராட்சி அலுவலகம் செல்ல காத்திருந்தபோது கூட்டத்தில் கார் பாய்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். நூலிழையில் ஊராட்சி தலைவர் உயிர் தப்பினார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமலை ஊராட்சி முன்னாள் தலைவர் பவுனாச்சி உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து, தலைவர் பதவிக்கான இடைதேர்தல் நடத்தப்பட்டு பாலு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நத்தமலை ஊராட்சி அலுவலகத்தில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்விராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து ஊராட்சி தலைவர் பாலு உள்ளிட்டோர் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல காத்திருந்தபோது, சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி வேகமாக வந்த கார் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் ஊராட்சி தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

அப்பகுதியை சேர்ந்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த 5 பேரையும் மற்றவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் காட்டுமன்னார்கோவில் அருகே குப்புப்பிள்ளை சாவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜ்குமார்(22) என்பது தெரியவந்தது.

இவர், ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரீகன் என்பவரின் உறவினர் ஆவார். எனவே, தேர்தல் முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு விபத்து நடத்தப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக  நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>