×

கடந்த 20 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 17வது முறையாக அதிகரிப்பு: சேலத்தில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது

சேலம்: பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 நாட்களில் 17வது முறையாக அதிகரித்துள்ளது. நேற்று பெட்ரோல் 30 காசும், டீசல் 33 காசும் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இம்மாதத்தில் நேற்று (4,18,19 தேதிகளில் தவிர) 17வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ103.31க்கும், டீசல் ரூ99.25க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ103.33ல் இருந்து 30 காசு அதிகரித்து ரூ103.63 ஆகவும், டீசல் ரூ99.27ல் இருந்து 33 காசு அதிகரித்து ரூ99.60 ஆகவும் விற்கிறது. அதேசமயம் சேலம் மாநகரில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ100யை தாண்டியது.

நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ100.02க்கு விற்பனையானது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Salem , 17th increase in petrol and diesel prices in last 20 days: Diesel price in Salem has crossed Rs. 100 per liter
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...