கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல்: டைரக்டர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில், கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பிரபல சினிமா டைரக்டர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி துத்திபட்டில் புதுவை கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டை எழுந்தது. இதனால் அப்போதைய கவர்னர் கிரண்பேடி, மைதானத்துக்கு `சீல்’ வைக்க உத்தரவிட்டார்.

இந்த தடைகள் நீக்கப்பட்டு, இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மைதானம் மூடப்பட்டபோது, புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார்.

ஆனால் அவர்கள், பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் எனக்கூறி சமாதானம் பேசி உள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மாணவி, புதுவை குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்தார். குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியதில், நடந்த சம்பவங்கள் உண்மை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி,  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

அதன்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மற்றும் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், புதுவை கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளரும், சினிமா டைரக்டர் ஷங்கரின் சம்பந்தியுமான தாமோதரன், அவரது மகனும், புதுவை கிரிக்கெட் அணி கேப்டனுமான ரோஹித், புதுவை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் வெங்கட் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டைரக்டர் ஷங்கர் மகளுக்கும்,  ரோஹித்துக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இவ்விவகாரம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் கவனத்துக்கு சென்றது. மேட்டுப்பாளையம் காவல்நிலைய அதிகாரிகளை சட்டசபையில் உள்ள தனது அறைக்கு வரவழைத்து அவர் விசாரித்தார். நடந்த சம்பவம் என்ன? புகாரின் உண்மைத்தன்மை, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து வடக்கு எஸ்பி சுபம் கோஷ் உள்ளிட்டோரிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

தவறு உறுதி செய்யப்பட்டால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அப்போது உத்தரவிட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின்பேரில் டைரக்டர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: