அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசத்திய காளை கருடனுக்கு கார் பரிசு கிடைக்குமா?.. ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி காளைக்குரிய முதல்பரிசை வழங்கக்கோரிய வழக்கில், வெற்றி பெற்றது உறுதியானால் பரிசை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 2019ல் நடந்த ஜல்லிக்கட்டில் எனது கருடன் என்ற காளை மூன்றாம் பரிசு வென்றது. மீண்டும், கடந்த ஜன. 16ல் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், எனது காளை அதிக புள்ளிகளை பெற்றது.

இதனால் எனது காளைக்கு முதல் பரிசாக காரும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேடைக்கு அழைத்து கோப்பை வழங்கினார்கள். ஒப்புதல் கிடைத்ததும் காரும், சான்றிதழும் வழங்குவதாக அப்போது கூறினர். ஆனால், அறிவிக்கப்பட்ட பரிசுகள் இப்போது வரை வழங்கப்படவில்லை. என் காளைக்கு வழங்க வேண்டிய முதல் பரிசை வழங்கவும், அதுவரை அலங்காநல்லூரில் 2022ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டை நடத்த இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட  வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலிக்கவும், மனுதாரரின் காளையே முதல் பரிசு பெற்றது என்பது உறுதியானால், அதற்குரிய பரிசை 2 வாரத்தில் வழங்கவும் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Related Stories:

More
>