திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு; இயந்திரத்தை இயக்கத் தெரியாமல் பயிற்றுனர் பரிதவிப்பு: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரத்தை இயக்க தெரியாமல் தடுமாறிய பயிற்றுனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டார். திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் ஆய்வுக்கூடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கக்கூடிய இயந்திரத்தை இயக்குமாறு பயிற்றுனரிடம் அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார். ஆனால் இயந்திரத்தை சரியாக இயக்க தெரியாமல் பயிற்றுனர் கோபாலகிருஷ்ணன் தடுமாறினார். இதையடுத்து அமைச்சர், பயிற்றுனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் சி.வி. கணேசன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள 90 தொழில் பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாக சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு இடம், குடிநீர், ஆய்வகம், கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்கிறோம். எந்தெந்த தொழில் பயிற்சி மையங்களில் என்னென்ன தேவை இருக்கிறது என முழுமையாக கணக்கெடுத்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று அதையெல்லாம் நிறைவேற்றுவதற்குதான் இந்த ஆய்வு.

தமிழகத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளைஞர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். ‘‘ஸ்கில் டெவலப்மென்ட்’’ என்ற புதிய துறையை உருவாக்கி, அதன்மூலம் பயற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற உதவி செய்வதே அரசின் நோக்கம்’’ என்றார்.

Related Stories: