×

பவானி அருகே ஆற்றில் மீன்பிடிக்க வெடிபொருள் வீசிய தொழிலாளியின் இரு கையும் துண்டான பரிதாபம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அணைநாவிதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சசிக்குமார் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுப்பு தொடர்பாக நேற்று முன்தினம் காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கோணவாய்க்கால் அருகே, காவிரி ஆற்றின் கரையில் தொழிலாளி ஒருவர் இரு கைகளிலும் மணிக்கட்டு வரை துண்டாகி முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். விஏஓ அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இது தொடர்பாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கைகள் துண்டான நபர், ஈரோடு ஆர்.என்.புதூர் குறிஞ்சி நகரை சேர்ந்த காளியப்பன் (40) என்பது தெரியவந்தது. மீன் பிடி தொழிலாளியான இவர், காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கு வெடி பொருளை வீச முயன்றுள்ளார். அது எதிர்பாராதவிதமாக கையில் இருந்தபோதே வெடித்து சிதறியதால், இரண்டு கைகளிலும் மணிக்கட்டு வரை துண்டாகி காயமடைந்ததும், சக தொழிலாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.


Tags : Bavani , The amputation of both hands of a worker who threw explosives to fish in the river near Bhavani
× RELATED திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின்...