தண்ணீர் கேன் வியாபாரி கொலையில் 3 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி: நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகரை ஒட்டி உள்ள வயல்வெளியில் கடந்த 18ம் தேதி மாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் உடல் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வயல்வெளியில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சிட்லபாக்கம் குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் (21) என்பதும், இவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

18ம் தேதி மாலை விக்னேஷ்வரனை சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் உள்பட 3 பேர் சிட்லப்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்போன் பறிப்பு கொள்ளையனான சிட்லபாக்கத்தை சேர்ந்த கமலகண்ணன்(21), அவரது நண்பர்கள் நாகராஜ்(21), சிவக்குமார் (எ) ரஞ்சித்(26) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், `சில மாதங்களுக்கு முன் செல்போன் பறிப்பு வழக்கில் கைதாகி நான் சிறையில் இருந்தேன்.

அப்போது காசிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வந்தான். மனைவியிடம் தொடர்பை ஏற்படுத்தி சிறையில் என்னை சந்திக்க போவதாக கூறி பணத்தை வாங்கினான். ஆனால் சிறையில் என்னை சந்திக்க வரவே இல்லை. சிறையில் இருந்து வந்த பின் வீட்டில் நான் இல்லாத நேரத்தில் வந்து மீண்டும் மனைவியிடம் பணம் வாங்கி சென்றான். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் விக்கியை அழைத்து கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத நன்மங்கலம் பகுதியில் மது அருந்தினோம். அப்போது மனைவியிடம் பணத்தை ஏன் வாங்கினாய் என்று கேட்டேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கேயே வீசி விட்டு தப்பிச்சென்றோம்,’ என கூறினார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories:

More
>