×

தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘‘ இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.  

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils ,Tamil Nadu ,Ramadas , Only Tamils in Tamil Nadu should pass the law immediately: Ramadas insists
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!