76 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் மாவா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகே எழில் நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த குட்கா பொருட்கள் துரைபாக்கம், தரமணி, அடையாறு ஆகிய பகுதியில் விற்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று கண்ணகி நகர் போலீசார் அப்பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெத்துராஜ் (32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 76 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் பெத்துராஜை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>