சிக்குன்குனியா, டெங்கு கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கை

சென்னை: சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், காலரா மற்றும் வயிற்று போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் எங்களை பணிநிரந்தரம் செய்து முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் கடந்த 2006ம் ஆண்டு சிக்குன் குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த கிராம, நகர பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டுப்படுத்த பணி அமர்த்தப்பட்டவர்கள் இந்த கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள்.

நாங்கள் கடந்த 2006ம் ஆண்டு முதல் இன்று வரை சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் பணியிலும், கொரோனா போன்ற நோய் தொற்று பணிகளிலும் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்துதல், வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறோம்.

மேலும், கிராம புறங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று கொசு புழுக்களை கண்டறிந்து அகற்றுதல், புகை மருந்து அடித்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது கூடுதல் பணிகளாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை அரசு மருத்துவமனைகளில் பெற்று பாதிக்கப்பட்ட நோயாளின் விவரங்களை பெற்று அவர்கள் இல்லத்திற்கு சென்று மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிதல், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், கோயில், அரசு கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் மருந்து தெளித்தல், கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்து வருகிறோம். எனவே எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு எங்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அளித்திடும் வகையில் பணிநிரந்தரம் செய்து, முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: