அணு தீமையற்ற தமிழ்நாடு கூடங்குளம் அணுஉலை பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும்: சூழல் அமைப்புகள் மற்றும் கட்சி தலைவர்கள் கோரிக்கை

சென்னை: அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடந்திருக்கும் மாபெரும் முறைகேடுகள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும் வரை விரிவாக்க பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். கூடங்குளம், அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பவேண்டும். அந்த ஒப்பந்தம் ஏன்  நிறைவேற்றப்படவில்லை என்பதை விளக்க வேண்டும்.

இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்தி வைக்க வேண்டும். 5 மற்றும் 6 அணுஉலைகள் கட்டுவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்கு பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலை பூங்கா போன்றவற்றை கைவிட்டு, நம் மாநிலத்தை”அணு தீமையற்றதமிழ்நாடு”  என்று அறிவிக்க வேண்டும். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வெளிநாடுகளின் தரமற்ற அணுஉலைகளை, தளவாடங்களை வாங்கி, அந்நாடுகளின் பொருளாதாரங்களை தூக்கி நிறுத்த உதவாமல், இந்திய மக்களும், தமிழர்களும், எங்களின் வழித்தோன்றல்களும் நலமாய், பாதுகாப்பாய் வாழ வழிவகை செய்யவேண்டும்.

இதுபற்றி ஜனநாயக சக்திகள் இணைந்து  முதல்வரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம். கூடங்குளத்தில் 1  மற்றும் 2வது அணு உலை போதும். 3, 4, 5 மற்றும் 6வது அணு உலைகள் வேண்டாம் என்ற  வலுவான கோரிக்கையும் முன்வைக்க உள்ளோம். 3 மற்றும் 4வது  அணு உலை, அணுக்கழிவு புதை மையத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை  வரவேற்கிறோம். குஜராத், மேற்கு வங்கம், ஆந்திராவில்  இந்த அணு உலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அரசுகள்  சொல்லிவிட்டது. அதன்பிறகே கூடங்குளத்தில் தற்போது அது அமைக்கப்பட  இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: