ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி உலக அரங்கில் இந்தியா தலை நிமிர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய பட்டினி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இதில், பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் போன்ற அண்டை நாடுகளை விட, மக்களை பட்டினி போடும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பது வெட்கக்கேடு. 2017 முதல் அடுத்த ஐந்து வருடங்களில், எடை குறைவான குழந்தைகள் பிறப்பை ஆண்டுக்கு 2 சதவிகிதமும், போதிய வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் இருப்பதை 25 சதவிகிதமும், பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதை ஆண்டுக்கு 3 சதவிகிதமும் குறைக்க மோடி அரசு நிர்ணயித்த இலக்கு தோல்வியில் முடிந்துள்ளது.

மோடி அரசின் மெத்தனப்போக்கால் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் 8.9 சதவிகிதமும், வளர்ச்சி இன்றி உயரம் குறைவாக இருப்பது 9.6 சதவிகிதமும், வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 4.8 சதவிகிதமும், குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை 11.7 சதவிகிதமும், பெண்கள் மத்தியில் ரத்த சோகை 13.8 சதவிகிதமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2017ல் 5 வயதுக்கும் குறைவான 10 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன. இதில், 68.2 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளதாக பத்திரிகைகளில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ. அரசு கண்டுகொள்ளாததால் உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 5 பெண்களில் ஒருவர் எடை குறைவாக உள்ளார். எடை குறைவாகக் குழந்தைகள் பிறப்பதற்கும் குறைப்பிரசவத்துக்கும் இதுவும் காரணம். குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதோடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>