அறநிலையத்துறை கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனைத்து மதத்தினரும் விண்ணப்பிக்க கோரி வழக்கு

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பில் விளம்பரம் வெளியானது. சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்துகொள்ள தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த இஸ்லாமியர் சுஹைல் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தாய்மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. சம்பந்தப்பட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: