கோயில்களில் நகைகளை கணக்கீடும் பணி தீவிரம் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் மதிப்பு சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயம்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* பொன், தங்கம், வெள்ளி ஆகிய இனங்களுக்கு சந்தை நிலவரப்படி ஒவ்வொரு இனத்திற்கும், ஒரு கிராம் இத்தனை ரூபாய் என்று மதிப்பீடு விலை நிர்ணயித்து இந்த விலைப்படி மேற்படி இனங்களுக்கு தமது அறிக்கையில் நகைகள் சரிபார்க்கும் அலுவலர் கையாள வேண்டும். இந்த விலை விவரம் தலைமை அலுவலகத்தில் இணை ஆணையர் வாரியாக தனிப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும். பொன் தங்கம், வெள்ளி, கற்கள் முதலியவைகளின் மதிப்பில் ஒரு இனத்திற்கும், அதே பொருளை கொண்ட மற்றொரு இனத்திற்கும் வித்தியாசமிருந்தால் வித்தியாசமாக மதிப்பிடுவதின் காரணத்தை தெளிவாக துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அதிகாரி தன் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.  

* கல் நகைகள் பற்றிய மதிப்பீட்டில் வைரம், விலை உயர்ந்த பச்சைக்கல் ஆகியவற்றின் எடையையும் காரட் கணக்கில் குறிக்க வேண்டும். கற்களின் மதிப்பை கூறும்போது, இதன் மதிப்பு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என தெரிவிக்க வேண்டும். மிகவும் பழமையான நகையாக இருந்தால் அதற்கு சரித்திர சான்றுகள் ஏதேனும் இருப்பின் அது யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற விவரத்தையும் குறிக்க வேண்டும். நகைகள் நல்ல நிலைமையில் உள்ளனவா அல்லது பழுது பார்க்கப்பட வேண்டுமா, அவ்வாறு பார்க்கப்பட வேண்டிய அவசியம் என்ன, இவை போன்ற விவரங்களை தெளிவாக மதிப்பீட்டறிக்கையில் தெரிவிக்க வேண்டும். பிரிக்கப்பட்ட அல்லது உதிரியாகவுள்ள ரத்தினங்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் பாதுகாக்கப்பட வேண்டும். மதிப்பீட்டறிக்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி வரிசை எண்கள் தரக்கூடாது. தொடர் வரிசை எண்கள் இருக்க வேண்டும். மேலும், தொகுப்பு விவரம் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

* கோயில் உபயோகத்தில் இல்லாததாக உள்ள பலமாற்று பொன், வெள்ளி, இனங்கள் ஆகியவற்றிற்கு அதன் தரம், மாத்து, எடை, காரட் முதலியவற்றை சந்தை நிலவரப்படி கணக்கிட்டு முழு விவரத்துடன் மதிப்பீடு செய்து விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

* நகைகள் மற்றும் பொன், வெள்ளி வைர கற்கள் போன்றவைகளின் எடைகளை நகை சரிபார்க்கும் அலுவலர் அலுவலக வைர நுண்ணறிஞரைக் கொண்டு கணக்கிட வேண்டும். அவர் தான் எடை, தரம், காரட், மாத்து பற்றிய விவரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். மதிப்பீடு செய்யப்படும் இனங்களை எடைபோடுவதற்கு தரமான ஐஎஸ்ஐ எடையிடும் கருவி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: