×

சச்சின் சாதனையை முறியடித்த ரசிகை!

நன்றி குங்குமம் தோழி

சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார். குறைந்த வயதில் அரை சதம் அடித்த அந்த வீராங்கனையின் கிரிக்கெட் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம். கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் களம் இறங்கியபோது, மைதானத்தில் ‘சச்சின்…

சச்சின்’… என முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் தான் ஷஃபாலி வர்மா. சச்சின் தனது கடைசி ரஞ்சிப் போட்டியை ஹரியானாவில் 2013 ஆம் ஆண்டு விளையாடிய போது, 9 வயது சிறுமியாக போட்டியை நேரில் பார்த்து ரசித்தவர் இவர்.

அன்று அவர் நினைத்துக்கூட பார்த்திருந்திருக்க மாட்டார்... அடுத்த 6 ஆண்டுகளில் சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று. 1989 ஆம் ஆண்டு, ஃபைசலாபாத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதம் அடித்த போது சச்சினின் வயது - 16 ஆண்டு 214 நாள்கள். இவரின் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசி முறியடித்து இருக்கும் ஷஃபாலியின் வயது 15 ஆண்டு 285 நாள்கள்.

கிரிக்கெட் காதலி

ஹரியானாவின் ரோடாக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஃபாலி வர்மா. சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டு மேல் ஈர்க்கப்பட்டவர். ஷஃபாலியின் விருப்பத்துக்கு ஆதரவு அளித்த அவரது தந்தை சஞ்சய் வர்மா, முறைப்படி கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.கிரிக்கெட் விளையாட்டு ஆண்களுக்கானது என்று சொல்லி வர்மாவைப் பயிற்சியில் சேர்க்க மறுத்தனர் பயிற்சியாளர்கள். அதற்கெல்லாம் அசராத அவரது தந்தை, மகளுக்கு ஆண் வேடமிட்டு பயிற்சிக்கு அனுப்பத் துணிந்தார்.

டங்கல் அமிர்கான் போல் வர்மா, ஷஃபாலியின் கூந்தலை வெட்டினார். பெயரை மாற்றி பேன்ட் - ஷர்ட் வாங்கிக் கொடுத்து பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். கிரிக்கெட்டுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த அப்பாவிற்காகவே, கிரிக்கெட் பயிற்சியில் முழு கவனம் செலுத்தினார்.

கிரிக்கெட் பயிற்சியாளர்கள் உண்மையைக் கண்டறியும் வரை, ஷஃபாலியின் பயிற்சி தொடர்ந்தது. ஊர் மக்களின் கண்டனத்துக்கு ஆளான போதும் வர்மாவின் தந்தை மனம் தளரவில்லை. பக்கத்து ஊரில் உள்ள பயிற்சி மையத்தில் ஷஃபாலியைச் சேர்த்தார்.

தந்தையும் மகளுமாய் மாறி மாறி நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த பலன்தான், இந்திய மகளிர் அணியில் ஷஃபாலிக்கு இடம் கிடைத்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஷஃபாலி இந்திய அணியில் தனக்கென ஓர் இடத்தை உறுதி செய்துவிட்டார். ஏற்கெனவே, ஸ்மிரிதி, ஜெமிமா என அதிரடி பேட்ஸ்வுமன்கள் இருக்கும் பட்டியலில் இப்போது புதிதாக இணைந்திருப்பது - ஷஃபாலி வர்மா!

அன்னம் அரசு

Tags : Sachin ,record breaking fan ,
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!