மூன்றாவது அலையின் அறிகுறியா? ரஷ்யா, இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் தீவிரம்

மாஸ்கோ: ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது உலக நாடுகளை புதிய அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

இந்தநிலையில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 1,028 ஆக அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கு தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு 34,074 ஆக உள்ளது. ஏற்கனவே ரஷ்யாவில் கொரோனாவுக்கு 2 லட்சத்து 26 ஆயிரத்து 353 பேர் இறந்துள்ளனர்.

மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. வரும் 30ம் தேதி முதல் மீண்டும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டி அடுத்த வாரத்தில் இருந்தே இந்த உத்தரவை அமல்படுத்த அதிபர் புடின் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதே போல, இங்கிலாந்தில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் மீண்டும் ஐசியு படுக்கைகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றன.

Related Stories: