2வது பயிற்சி ஆட்டத்திலும் அசத்தல் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

துபாய்: ஆஸ்திரேலிய அணியுடனான உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஐசிசி அகடமி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. வார்னர், கேப்டன் பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்து அஷ்வின் சுழலில் வெளியேறினார். அடுத்து வந்த மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பிஞ்ச் 8 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஆட்டமிழக்க, ஆஸி. அணி 3.1 ஓவரில் 11 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் - கிளென் மேக்ஸ்வெல் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 37 ரன் (28 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ராகுல் சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து ஸ்மித்துடன் ஸ்டாய்னிஸ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்க்க, ஆஸி. ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஸ்மித் 57 ரன் (48 பந்து, 7 பவுண்டரி) விளாசி புவனேஷ்வர் வேகத்தில் ரோகித்திடம் பிடிபட்டார்.

ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 41 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேடு 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டிக்கு ரோகித் கேப்டனாக இருந்த நிலையில், கோஹ்லி 2 ஓவர் பந்துவீசி 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 2, புவனேஷ்வர், ஜடேஜா, ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

கே.எல்.ராகுல் - ரோகித் ஷர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 68 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ராகுல் 39 ரன் (31 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஏகார் பந்துவீச்சில் வார்னரிடம் பிடிபட்டார். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ரோகித் 60 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஓய்வு பெற்றார். இதையடுத்து சூரியகுமார் - ஹர்திக் இணைந்து வெற்றி இலக்கை எட்டினர். இந்தியா 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது.

சூரியகுமார் 38 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 2வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories:

More
>