×

‘புதிய பெயருடன் புதிய மெய்நிகர் உலகம்’அடையாளத்தை மாற்றும் பேஸ்புக்: தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம்

நியூயார்க்: ஆன்லைன் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக் நிறுவனம் தனது அடையாளத்தை மாற்றி, புதிய பெயருடன், புதிய மெய்நிகர் உலகத்தை படைக்கப் போகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கிய தனது பயணம் குறித்த அறிவிப்பை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அடுத்த வாரம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அசுர வேகத்தில் ஓடும் இந்த காலத்தில், தவற விட்ட நமது நட்புகளை மீண்டும் ஒன்றுசேர்க்கும் ஒரு சமூக வலைதளமாக கடந்த 2004ம் ஆண்டில் அறிமுகமானதுதான் பேஸ்புக்.

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் சாதாரண சமூக வலைதளமாக மட்டுமில்லாமல், பேஸ்புக் இன்று பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. செய்திகளை கொண்டு சேர்க்கும், பொருட்களை விளம்பரம் செய்யும், அரசியல் பிரசாரம் செய்யும் தளமாகவும் பேஸ்புக் பல முகங்களை கொண்டுள்ளது. மக்களின் மனதை மாற்றி, ஒரு நாட்டின் அரசாங்கத்தையே தீர்மானிக்கும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்துள்ளது.இதனால் பல்லாயிரம் கோடியில் வருமானம் கொட்டிக் கொண்டிருக்கிறது.

அதே சமயம், பேஸ்புக்கில் பொய் தகவல்கள், போலி செய்திகள், புரளிகளும் வேகமாக பரவி பல அசம்பாவிதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல நாடுகளும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடிவாளம் போட வேண்டுமென குரல் எழுப்பி வருகின்றன. குறிப்பாக, பேஸ்புக்கின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவில் பேஸ்புக்கிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென அந்நாட்டின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக சேர்ந்து நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்ற இருப்பதாக அமெரிக்காவின் தி வெர்ஜ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு, பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு மாநாடு நடக்கும் வரும் 28ம் தேதி  வெளியிடப் போவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் மறுக்கவில்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை. வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறி உள்ளார். ஆனாலும், பேஸ்புக்கின் புதிய பெயர் மாற்றம் நடக்கப் போவது உறுதி என தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைத்து புதிய பெயருடன் பேஸ்புக் இனி வலம் வரப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பேஸ்புக் நிறுவனம் புதிய மெய்நிகர் உலகத்தை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்படிப்பட்ட புதிய இணைய உலகை, புதிய பெயருடன் தொடங்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகைப் படைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக கடந்த 2016ம் ஆண்டிலேயே ஜூகர்பெகர் 10 ஆண்டு திட்டத்தை தீட்டி உள்ளார். அதோடு ரூ.25,000 கோடியை முதலீடு செய்தார். விர்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெடாவெர்ஸ் இணைய உலகம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே அமெரிக்காவில் உள்ள நண்பருடன் விர்சுவல் முறையில் நேருக்கு நேர் சந்தித்து பேச முடியும். இறந்து போன சொந்தங்களையும் சந்தித்து பேசக்கூடிய மாய உலகமாகவும் மெடாவெர்ஸ் உருவாக்கப்படலாம்.

இந்த அடுத்த கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியை கொண்டு புதிய பெயருடன் பேஸ்புக் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகலாம்.

புதுப்பெயர் என்ன? டிவிட்டரில் கிண்டல்
கடந்த 4ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்த தளங்கள் முடங்கின. இதனால், பேஸ்புக் நிறுவனம் பல கோடி நஷ்டத்தை சந்தித்தது. ஒவ்வொரு முறை பேஸ்புக் தொழில்நுட்ப பிரச்னையை எதிர்கொள்ளும் போதும், போட்டி நிறுவனமான டிவிட்டரில் கிண்டல், கேலி பதிவுகள் அதிகளவில் வரும். அதுபோல தற்போது பேஸ்புக் பெயர் மாற்றத்திற்கும் பல கேலி பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

‘பெயரை மாத்திட்டா, பொய் தகவல் பரப்பும் நிறுவனம் என்ற அவப்பெயரிலிருந்து தப்பி விட முடியுமா?’ என டிவிட்டர் பயனர்கள் கேலி செய்கின்றனர். ‘பெயரை மாத்தி, குற்றச்சாட்டிலிருந்து பேஸ்புக் தப்பிக்க பார்க்கிறது’ என்றும், ‘சீப்பை ஒளிச்சு வைச்சு கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறது பேஸ்புக்’ என்றும் கேலி செய்கின்றனர். ‘கள்ளத்தனமாக கண்காணிக்கும் கதாநாயகன்’, ‘மஞ்சப் பத்திரிகை’, ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என பலவாறு புதிய பெயர்களையும் சூட்டி வருகின்றனர்.

ஒரே ஆப்பில் இனி எல்லாம்
பேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதனுடைய ஒரே மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓக்குலஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் சேவைகளும் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

* பேஸ்புக்கிற்கு உலகம் முழுவதும் 300 கோடி பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 34 கோடி.
* இந்தியாவில் பேஸ்புக் குழுமத்தின் 2020-21ம் ஆண்டு வருமானம் ரூ.9,000 கோடி, இதற்கு முந்தைய ஆண்டுகளில் முறையே ரூ.6,613 கோடி, ரூ.2,254 கோடி வருவாய் சம்பாதித்துள்ளது.
* உலகளவில் பேஸ்புக்கின் 2020ம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ.6.6 லட்சம் கோடி.
* 2012ல் இன்ஸ்டாகிராமை ரூ.7,500 கோடிக்கும், 2014ல் வாட்ஸ்அப் நிறுவனத்தை ரூ.1.1 லட்சம் கோடிக்கும், அதே ஆண்டில் ஓக்குலஸ் நிறுவனத்தை ரூ.15 ஆயிரம் கோடிக்கும் பேஸ்புக் வாங்கியது. இதில் ஓக்குலஸ் நிறுவனம் தான் விஆர் ஹெட் செட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

Tags : Facebook changing the identity of the ‘new virtual world with a new name’: Journey to the next stage of technological development
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்