போலீசார் மீது பட்டாசு, கற்களை வீசியதால் மிலாது நபி ஊர்வலத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு: மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் பதற்றம்

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் மிலாது நபி ஊர்வலத்தில் போலீசார் மீது பட்டாசு, கற்களை வீசியதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதனால், மூன்று இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தார், பர்வானி, ஜபல்பூர் ஆகிய இடங்களில் நேற்று மிலாது நபி ஊர்வலம் நடந்தது. அப்போது, குறிப்பிட்ட பாதையில் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஜபல்பூரில் ஊர்வலத்தில் சென்ற சிலர் பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் மீது பட்டாசுகள் மற்றும் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மச்சாலி பஜார் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், பெரும் பதற்றம் நிலவியதால் பிரார்த்தனைக்காக திரண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி சித்தார்த் பகுகுனா கூறுகையில், ‘மச்சாலி பஜார் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஊர்வலத்தின் போது சிலர் காவல்துறையினர் மீது பட்டாசு மற்றும் கற்களை வீசியதால் தற்காப்புக்காக போலீசார் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அடையாளம் காணப்பட்ட 51 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். அதேபோல், பர்வானி மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். மேற்கண்ட ஊர்வலத்தின் போது சர்ச்சைக்குரிய பாடல் ஒலித்ததால், ராஜ்பூர் நகரத்தில் பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தார் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது, போலீசாருக்கும், குறிப்பிட்ட பிரவினருக்கும் மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related Stories: