‘கல்லை’ அகற்ற சொன்னதற்கு... கிட்னியை உருவிய மருத்துவர்கள்: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 11.23 லட்சம் இழப்பீடு

அகமதாபாத்: குஜராத்தில் சிறுநீரகத்தில் கல் அடைப்பை நீக்க சொன்னதற்கு, சிறுநீரகத்தையை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இவ்விவகாரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 11.23 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பாலாசினோரில் கே.எம்.ஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு மே 24ம் தேதி, சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட தேவேந்திர ராவல் என்பவர் சிகிச்சைக்காக மேற்கண்ட மருத்துவமனையில் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுநீரகத்தில் 14 மில்லிமீட்டர் அளவில் ‘கல்’ இருப்பதாக கூறினார். மேலும், உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்ைல என்றால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்றனர். அதிர்ச்சியடைந்த அவர், தனது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு செப். 3ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், சிறுநீரகத்தில் அடைப்பட்ட கல்லை அகற்றுவதற்கு பதிலாக, நோயாளியின் இடதுபக்க சிறுநீரகத்தையே மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். ஒற்றை சிறுநீரகத்தில் வீடுவந்து சேர்ந்த தேவேந்திர ராவல், சில மாதங்கள் மட்டுமே ஓரளவு நலமுடன் இருந்தார். அதன்பின், மீண்டும் அவருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. அதனால், அகமதாபாத்தில் உள்ள வேறொரு மருத்துவமனையில் தன்னை பரிசோதித்து பார்த்தார். அப்போது, அவரது நிலைமை  மோசமானதாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி 2012ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இறந்தார். அந்த மருத்துவர்கள் அளித்த அறிக்கையில், தேவேந்திர ராவலின் உடலில் ஒரு சிறுநீரகம் மட்டுமே இருந்ததாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இருதரப்பு விசாரணைகள் முடிவுற்ற நிலையில், ஆணையத்தின் தலைமை உறுப்பினர்  டாக்டர் ஜே.ஜி.மெக்வான் அளித்த உத்தரவில், ‘மருத்துவமனை நிர்வாகத்தின் ஊழியர்கள் செய்த தவறுக்கு, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு; இது, மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாகவே கருதப்படுகிறது. எனவே, வழக்கு தொடர்ந்த தேதியில் இருந்து இன்றைய தேதி வரை, இழப்பீட்டு தொகையான ரூ. 11.23 லட்சத்துக்கு, 7.5 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: