பரமக்குடி அருகே கணவரை பிரிந்து வேறொரு சமூக இளைஞரை காதலித்த இளம்பெண் ஆணவக்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள நண்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தென்னரசு - அமிர்தவள்ளி தம்பதி. இந்த தம்பதியின் மூத்த மகள் 23 வயதான கௌசல்யா. இவருக்கும் பரமக்குடி அருகேயுள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். நண்டுபட்டியில் தாய் - தந்தையுடன் வசித்து வந்த கௌசல்யா கடந்த 15ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் மருத்துவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் மறுநாளே கௌசல்யா திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக கௌசல்யாவின் உடலை பெற்றோர் எரித்துவிட்டனர்.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கணவரிடம் இருந்து பிரிந்த கௌசல்யா வேறொரு சமூக இளைஞருடன் பழகி வந்துள்ளார். இதனை கௌசல்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் அதை கேட்காமல் கௌசல்யா தொடர்ந்து பழகி வந்துள்ளார். கணவரை பிரிந்த கௌசல்யா வேறு சமூக இளைஞருடன் பழகுவது தொடர்பாக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற கௌசல்யாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்த பெற்றோர் கழுத்தை நெரித்து கொன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கௌசல்யாவின் தந்தை தென்னரசு மற்றும் தாய் அமிர்தவள்ளியை போலீசார் கைது செய்தனர். ரகசியமாக உடலை எரிக்க உடந்தையாக இருந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>