வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை குறித்து மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்  தற்போது நடத்த உள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பான குறிப்பு வெளியாகியுள்ளது. இதில் அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 448.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது.

இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு ஆகும்.  வடகிழக்கு பருவமழைக் காலத்தில், புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, தொடர்புடைய சில பகுதிகளில், கன மழை முதல் மிக கன மழை ஏற்படுகிறது. வட கிழக்கு பருவமழைக் காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 ஆம் வாரத்தில் துவங்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் தற்போது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக 16ம் தேதியன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட அதீத கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

முன்னதாக கடந்த 24ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரிவான அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் 11ம் தேதியன்று முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

மேலும், 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 393.4 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. இது, தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கப் பெற வேண்டிய இயல்பான மழையளவான 336.0 மி.மீட்டரை விட 17 விழுக்காடு கூடுதலாகும். இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் 34 உயிரிழப்புகளும், 180 கால்நடை இறப்பு, 58 குடிசைகள் / வீடுகள் முழுமையாகவும், 396 குடிசைகள் / வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

இதில் தகுதியுள்ள இனங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை என்ற போதிலும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் 01.10.2021 முதல் ஏற்பட்ட மழை விவரம் கணக்கிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 01.10.2021 முதல் 19.10.2021 முடிய தமிழ்நாட்டிற்கு 148.5 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது.

இது 19ம் தேதி வரை கிடைக்கப்பெற வேண்டிய இயல்பான மழையளவான 97.9 மி.மீட்டரை விட 52 விழுக்காடு கூடுதலாகும். 1ம் தேதி முதல் 19ம் தேதி முடிய அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக அதிகப்படியான மழையும்.  செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், இராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகப்படியான மழையும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இ,யல்பான மழையும், விருதுநகர் மாவட்டத்தில் குறைவான மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் குறைவான மழையும் பதிவாகியுள்ளது.

மனித உயிரிழப்பு மற்றும் காயமுற்றவர்கள் விவரத்தில் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 நபர்கள் காயமுற்றுள்ளனர். இதனையடுத்து,  78 மாடுகளும், 68 செம்மறி ஆடு / வெள்ளாடுகளும், 12 கோழிகளும் இறந்துள்ளன.

Related Stories: