கண்டனத்திற்கு மதிப்பளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறது. அண்மையில் சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்த சென்றிருந்தனர். அச்சமயம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் வாகனமும் மாட்டிக்கொண்டது.

இதனால் அவர் காலதாமதமாக உயர்நீதிமன்றம் செல்ல நேரிட்டதால், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து இதுகுறித்து சில அதிருப்தி கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, முதல்வரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12லிருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இன்று மதியம் 2:15 மணியளவில் எஸ்.கே.பிரபாகன் ஆஜரானார். அப்போது தனது கண்டனத்திற்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனங்களின் எண்ணிக்கையை குறைந்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம். இதில் யாரும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கிடையாது என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் நீதிபதிகளுக்கு மட்டுமல்ல; பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக முயற்சி எடுத்ததற்கு தலைமை செயலாளர், டி.டி.பி., உள்துறை செயலாளருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இது தொடர்பாக உடனடியாக கூட்டம் கூட்டப்பட்டு முதல்வரின் கான்வாய் வாகனம் அவருடைய உத்தரவின் பேரில் குறைக்கப்பட்டதாகவும், முதல்வர் வாகனம் செல்லும் போது எதிரே வரக்கூடிய வாகனங்களுடைய போக்குவரத்தை தடுத்து நிறுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டுக்கொண்டார்.

Related Stories: