கூடங்குளத்தில் ஆழ்நிலை அணுக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுங்கள்!: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!!

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு, ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கூடங்குளம் அணு உலை வளாகத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே 1 மற்றும் 2ம் அணு உலைகள் சுமார் 100 முறைக்கு மேல் பழுதாகி இருப்பதால் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைக்கும் முடிவையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். இதையடுத்து பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியா - ரஷ்யா இடையேயான அணு உலை ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணு உலை கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்த பெரும்பாலான வழக்குகளை தற்போதைய தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு ஜவாஹிருல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் ஃபரூக் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் ஆழ்நிலை அணுக்கழிவு மையம் அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: