×

பாணாவரம் அருகே சிற்றோடை தரைப்பாலத்தில் தடுப்பு வேலி அமைப்பு-அசம்பாவிதங்கள் தடுக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை

பாணாவரம் :  பாணாவரம் அருகே சிற்றோடை தரைப்பாலத்தில் செல்லும் வெள்ளத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வருவாய்த்துறையினர் தடுப்பு வேலி அமைத்து நடவடிக்கை மேற்ெகாண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் சிற்றோடை உள்ளது. காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், கோவிந்தச்சேரி, மேல்வீராணம், மங்களம் ஆகிய ஏரிகளை நிரப்பிய நிலையில், இங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் புதூர், கூத்தம்பாக்கம்வழியாக உள்ள சிற்றோடை மூலம் மகேந்திரவாடி ஏரிக்கு செல்கிறது.

கூத்தம்பாக்கத்தில் உள்ள தரைப்பாலம் வழியாக தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆபத்தை உணராமல் உற்சாகமாக ஆனந்த குளியல் போட்டனர். மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற இளைஞர்கள், பல்வேறு விதமான நிலைகளில் டைவ் அடித்து ஓடும் நீரில் ஆர்ப்பரித்தனர்.

இந்நிலையில், கூத்தம்பாக்கம் சிற்றோடை தரைப்பாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து வருவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று கூத்தம்பாக்கம் சிற்றோடை தரைப்பாலம் பகுதிக்கு நேற்று வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க யாரும் குளிக்க செல்லாத வண்ணம் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கம்புகள் கொண்டு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்தது.


Tags : Panchawaram , Panavaram: To prevent any untoward incidents in the flood waters of the creek near Panavaram
× RELATED பாணாவரம் பகுதியில் சாலையோரம் ஆபத்தான...