புத்துயிர் பெறுகிறது உழந்தை ஏரி இந்திராகாந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க புதிய திட்டம்

* பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி சிலை சதுக்கத்தில் விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட 8 முக்கிய சாலைகள் சந்திக்கின்றன. எந்த பக்கம் இருந்து வந்தாலும்,  இப்பகுதியை கடந்துதான் நகரத்துக்குள் நுழைய முடியும். இதனால் எப்போதும் வாகன நெரிசல், மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். மழைக்காலத்தில் சில மணி நேரம் மழை பெய்தாலே இப்பகுதி திடீர் ஏரியை போன்று மாறிவிடும். இதன் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிற்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் தொடர்ந்து நிலவுகிறது. இதற்கு பல்வேறு காலக்கட்டங்களில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குறிப்பாக இந்திராகாந்தி சதுக்கத்தை சுற்றி போர்வெல்கள் அமைக்கப்பட்டு, தண்ணீரை பூமிக்குள் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. அதேபோல் அண்ணா நகர் வழியாக செல்லும் வாய்க்காலை விரிவுபடுத்தி, வெள்ளநீரை விரைவாக வடிய வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை. 2.5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தாலே நிலைமை படுமோசமாகிவிடும்.

வாகனங்களில் வருவோர் இப்பகுதியை நீந்திதான் கடந்து செல்ல முடியும் என்ற நிலை தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த 7 செமீ கனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடானது. இந்திராகாந்தி சிலை பகுதியில் வெள்ளம் வடிய 4 மணி நேரத்துக்கு மேலானது. இந்நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மழைக்காலங்களில் வரும் வெள்ள நீரை வேறு பகுதிகளுக்கு திருப்பும் வகையில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 அப்போது இந்திராகாந்தி சிலையை சூழும் மழைநீர் எப்பகுதிகளில் இருந்து வருகிறது என்பதை வரைபடத்துடன் அதிகாரிகள் விளக்கினர். அப்போது கனகன் ஏரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மேட்டுப்பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் அதற்கான வடிகால் வாய்க்கால்கள் சரியாக இல்லாததால், ஆங்காங்கே உடைத்துக்கொண்டு முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருவதை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வடிகால் வாய்க்கால்கள் பாம்பு வளைந்து, நெளிந்து வருவதை போல பல இடங்களில் வருவதால், மழைநீர் இலகுவாக சென்று வாய்க்காலில் கலப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. மேலும் அளவு மிக குறுகலாக இருப்பதன் காரணமாக ஊருக்குள் புகுந்துவிடுகிறது.  

எனவே உடனடியாக இதனை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வாய்க்கால்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதையும் தெரிவித்தனர். இப்பணிகளை விரைவுபடுத்த தலைமைசெயலரிடம் பேசுவதாக தெரிவித்தார்.

உழந்தை ஏரியில் நீர் தேக்கும் திட்டம்

அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், தற்போதுள்ள இந்திராகாந்தி சதுக்கம் ஒரு காலத்தில் வயல்கள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளாக இருந்துள்ளது. அதற்கேற்ப மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் இப்பகுதியை நோக்கி வளைந்து, நெளிந்து வருகின்றன. இறுதியாக சாலைகளில் பெருக்கெடுத்து ஒட்டு மொத்த வெள்ள நீரும் இந்திராகாந்தி சதுக்கத்தில் தேங்கி நிற்கிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 32 கோடியில் தொழில் நுட்ப ரீதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள்  விரிவுபடுத்தப்பட்டு தடையில்லாமல் மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட  இருக்கிறது. மழை நீரை வடிய வைத்து கடலுக்கு கொண்டு சேர்ப்பதில் பயனில்லை. எனவே, நீரை தேக்கி வைத்து மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம். நகரமயமாதல் காரணமாக நீர்வரத்து கால்வாய்களை இழந்து நிற்கும் உழந்தை ஏரியில் நீரை தேக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இதன்மூலம் இந்திராகாந்தி சதுக்கம், பாவாணர் நகர்,  பூமியான்பேட்டையில் வெள்ள நீர் தேங்குவதை தடுக்கும் வகையில் உழந்தை ஏரி பக்கம் திருப்பப்படும். இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். என்றார்.

Related Stories: