நெல்லையில் மழையால் அழுகிய மிளகாய் மூட்டைகள்-குப்பையில் வீச்சு

நெல்லை : நெல்லையில் பெய்த மழையால் அழுகிய மிளகாய் மூட்டைகள் குப்பையில் வீசப்பட்டன.  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. சனிக்கிழமை பெய்த கனமழையால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விளை நிலங்களில் மழைநீர் பாய்ந்தது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டதுடன் பல்லாரி வெங்காயம், உள்ளி, மிளகாய், தக்காளி போன்ற செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் அவை அழுகும் நிலை ஏற்பட்டது. இதேபோல் வட மாவட்டங்களிலும் பல இடங்களில் கனமழை பெய்வதால் நெல்லைக்கு சில பகுதிகளில் இருந்து வந்த காய்கறி மூடைகளும் மழையால் சேதமடைந்தன. நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் மிளகாய் மூடைகள் பல அழுகி கெட்டு போகின. இதனால் அவை வேறு வழியின்றி குப்பையில் வீசப்பட்டு கிடந்தன. தாழவாடி, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மிளகாய் நெல்லைக்கு அதிகளவில் வருகின்றன. தற்போது மிளகாய் கிலோ ரூ.18 முதல் 20 வரை மொத்த விற்பனை விலையாக உள்ளது. மிளகாய் விலை குறைந்துள்ள நிலையில் தேக்கமடைவதாலும் மழை நேரத்தில் விரைவில் கெட்டுவிடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: