உயர் அதிகாரிகள் கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா?: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையானது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கை கண்காணிப்பேன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணனும், இதேபோல் விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று ராஜேஷ்தாசும் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

முதலில் எஸ்.பி. கண்ணன் தொடர்ந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி. கண்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் எஸ்.பி. காரை தான் நிறுத்தவில்லை என்றும் கார் தாறுமாறாக ஓடியதால் பொதுமக்கள் தான் நிறுத்தினார்கள் என்றும் வாதிடப்பட்டது. டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் குறுக்கிட்ட நீதிபதி, உயரதிகாரி கொலை செய்ய சொன்னால் கூட செய்வீர்களா? என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும் சட்டவிதிகளுக்கு உட்பட்ட அறிவுறுத்தல்களையே பின்பற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதி, காவல்துறையில் 10 சதவீதம் பேர் தான் மனசாட்சியுடன் வேலை பார்ப்பதாகவும், உயர் அதிகாரிகளே குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். உயர்நீதிமன்ற கண்டனத்தை அடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனவை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

Related Stories: